செய்திகள்

புதுக்குடிருப்பு மக்களின் கோரிக்கை நிராகரிப்பு, கதிர்காமர் முகாமிற்குள் முடக்க திட்டம்

Posted in எங்கள் தமிழ் by ustamil on ஓகஸ்ட் 17, 2010
தமது செந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிட்டிருந்த புதுக்குடியிருப்பு மக்களை வவுனியா மெனிக்பாம் வலயம் 4லிருந்து கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றுவதற்கு இராணுவத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதால் குறிப்பிட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று காலை இடம் பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுகையில், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வந்த 1240 குடும்பத்தைச் சேர்ந்த 4180பேர் மெனிக் பாம் வலயம் 4 இல் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும், இவர்கள் தமது சொந்த இடத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஏற்கனவே அதிகாரிகளிடம் தமது ஆவலை வெளிப்படுத்தியதாகவும், ஆகக் கூடியது தமது பகுதியில் தமது வீடுகளுக்கருகிலிருக்கும் பாடசாலைகளிலோ, அல்லது பொது கட்டிடங்களிலோ தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் கெஞ்சியுள்ளதாகவும் அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்காத நிலையில் கதிர்காமர் நலன்புரி நிலயத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்று தெரிவிக்கப்படுகின்றது.
கதிர்காமர் முகாமில் விறகு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு செல்வதற்கு மக்கள் விரும்பவில்லை என்பதுடன். அவர்கள் ஒரு முகாமைவிட்டு மற்றொரு முகாமிற்கு மாறுவதற்கு விருப்பமற்றவர்களாக இருக்கின்றனர்.
இந் நிலையில் இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுடன் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  “நீங்கள் புலிகள் சொன்னால் கேட்பீர்கள் நாங்கள் சொன்னால் மறுக்கின்றீர்கள் நீங்கள் கண்டிப்பாக மாறித்தான்” ஆகவேண்டும் என்று மிரட்டுகின்ற தொணியில் பேசியுள்ளனர்.
இதனால் மக்கள் மிகவும் கொதித்துப்போயுள்ளனர். அந்தப்பகுதியில் பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து தகவல் கிடைத்துள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக