செய்திகள்

மீளக்குடியமர்த்துமாறு மாந்தை எள்ளுப்பிட்டி, பெரிய நாவற்குளம் மக்கள் போராட்டம்.

Posted in 1 by ustamil on மார்ச் 24, 2010
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்துவரும் மாந்தை எள்ளுப்பிட்டி, பெரிய நாவற்குளம் கிராம மக்கள் தம்மை மீளக் குடியமர்த்துமாறு கோரி, மன்னார் அரச செயலகத்திற்கு முன்னால் இன்றையதினம் போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர். இதே வேளை மன்னர் அரசாங்க அதிபருக்கு தமது முறைப்பாடுகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்துள்ளனர்.
1990ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த தம்மை விரைவில் குடியமர்த் தநடவடிக்கை எடுக்கப்படாமையினாலேயே இப் போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பிரதேசங்களுக்கு அயலிலுள்ள திருக்கேதீஸ்வரம், அடம்பன், பாப்பமோட்டை ஆகிய கிராம மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனாலும் தாம் இதுவரை மீள்குடியேற்றப்படாமை குறித்து மக்கள் குறைபடுகின்றனர்.

புளொட் அமைப்பின் வேட்பாளர்கள் நெடுங்கேணி விஜயம்.

Posted in 1 by ustamil on மார்ச் 24, 2010
வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வ.திருவருட்செல்வன் (மூர்த்தி) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் நேற்றுமுற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி, ஆனந்தப்புளியங்குளம், ஒலுமடு, சின்னப் பூவரசன்குளம், மதியாமடு ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர்.
இதன்போது தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெடுங்கேணி நகரில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் யாவருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான தேவைகளும், பிரச்சினைகளும், கஸ்ரங்களுமே காணப்படுகின்றன. இம்மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தொடர்ந்தும் இம்மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை பெற்றுத்தருமாறு பெற்றோர் எம்மிடம் விடுத்திருக்கும் வேண்டுகோள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம்.
எனினும் இன்னும் பல சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களை விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவோம். எனவே எமது கட்சி மேற்கொண்டுவரும் சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

தபால் மூல வாக்களிப்புகள் நாளை ஆரம்பம்

Posted in 1 by ustamil on மார்ச் 24, 2010
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகிறது. நளை வியாழக்கிழமையும்  மறுதினம் வெள்ளிக்கிழமையும் நடைபெறும் இந்த வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான  சகல அரச அலுவலகங்களும் குறிப்பிட்ட இருதினங்களிலும் தேர்தல் வாக்குச் சாவடிகள் போன்று இயங்கும் எனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்திருக்கிறது.
தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் பெப்ரல் அமைப்பு, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் ஆகியவற்றின் சார்பில் தலா ஒருவரும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழு சார்பில் தலா இருவரும் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்படுவர்.அரச அலுவலகத்தினுள் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு நேரங்களில் வந்து செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும்.  என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தபால் மூல வாக்குப் பதிவுகள் நடைபெறும் அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டுக் கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வணக்கத்துக்குரியவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினாலும் ஆட் பதிவூத் திணைக்களத்தினாலும் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ,தேர்தல்கள் திணைக்களத்தினால் நாடாளுமன்றத் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, கடந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.